ஜெயமோகன் திருப்பூர் கட்டண உரை தொகுப்பு - நினைவிலிருந்து எடுத்தல்
ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்திய கட்டண உரை திருப்பூரில் 10-Apr-2022 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. “கல்தூணும் கனிமரமும் - பண்பாட்டையும் மதத்தையும் பெற்றுக்கொள்ளுதல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் இரண்டு மணி நேரம் (தோராயமாக) உரையாற்றினார். அந்த உரை பதிவு செய்யப்படவில்லை. ஆகவே அதன் சாராம்சத்தை மறக்காமல் இருக்க நினைவிலிருந்து மீட்டெடுத்து பதிவு செய்கிறேன். இது எழுத்தாளரின் கருத்தை நான் புரிந்து கொண்டது. தவறான புரிதல் இருப்பின் சுட்டி காட்டவும். இக்கட்டுரையில் நான், எனது என குறிப்பிடுவது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை, என்னை அல்ல, ஒரு கோர்வைக்காக அவர் உரையை அவ்வாறே தொகுக்கும் முயற்சி.
பகுதி - 1
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் எது சிறந்த கலை என கூற முடியுமா, அது ஒரு சீண்டலான கேள்வி. அது எப்படி கூற முடியும், ஒரு சிறந்த ஓவியத்தை பார்க்கும்போது அதுதான் சிறந்தது என தோன்றும். இலக்கியத்தால் அவ்விடத்தை அடைய முடியாதென தோன்றும். அதேபோல ஒரு சிறுகதை
அல்லது நாவல் படிக்கும்போது அதுதான் சிறந்தது என தோன்றும். எதுவானாலும் நம்மை அக்கலைக்கு முழுதலிக்க வேண்டும். ஒன்றைச் சொல் என்பது சரியல்ல. பிறிதொன்றை மறுக்காமல் ஒன்றைச் சொல்வது இயலாதது, இருந்தாலும் அதற்கான முயற்சியை அறிவார்ந்த தளத்தில் அதன் அருகில் சென்று பார்க்க முயலலாம்.
உதாரணமாக, ஜப்பானிய கலையை எடுத்துக்கொள்வோம். space அவர்களுக்கு மிகவும் முக்கியம். மிகச்சிறிய இடத்தில் அனைத்து பொருள்களையும் நிரப்பி அதன் நடுவே வெட்டா வெளியையும் உருவாக்கிவிடுவார்கள். அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் சரி. ஆனால், ஐரோப்பிய/மேலை நாட்டு கலை என்பது இதற்கு நேரெதிரானது. மிகப்பெரிய வெளியில் கட்டிடத்தைக் கட்டுவார்கள், அதற்க்குள் இருந்தாலும் வெளியில் இருப்பது போன்று இருக்கும். அவ்வளவு பெரிய கட்டிடத்தை வடிவமைப்பார்கள். எடுத்துக்காட்டாக, இருபுறமும் மூன்றடுக்கு தூண்களுடன் வானம் போன்று இருக்கும். வெளியில் பனி வானத்தை மூடியிருந்தாலும் உள்ளுக்குள் வசந்த கால வானத்தைக் காணலாம்.
இந்திய கலைக்கு வருவோம். ஒருநாள் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் இந்திய கட்டிட கலையின் சிறப்பு எதுவென பேச்செழுந்த போது சட்டென தூண்கள் என சொல்லிவிட்டேன். அனைவரும் அருகில் வந்துவிட்டனர், சொல்லியபின் யோசித்தேன் ஏன் அவ்வாறு கூறினேன் என, என் மனதில் (காரியோ) ஓவியங்கள் நினைவுக்கு வந்தன. அதுவொரு குகைவரை ஓவியம், தோராயமாக கி.மு.11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அவற்றை பெலவாடி ஓவியதோடு பொருத்திக்கொண்டேன். பெலவாடி ஓவியம் கி.பி.7 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. கிட்டத்தட்ட 1800 ஆண்டுகள் பிற்காலத்தவை. இந்த இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தை சார்ந்தவை, இரண்டிற்கும் பொதுவாக இருப்பது என்பது தூண்கள்தான். நீண்ட தொடர்ச்சி, குடைவரைக் கோயிலில் தூண்களின் தேவை ஏன் ஏற்பட்டது?
ஆயிரம் ஆண்டுகள் கழித்து
பெலவாடியிலும் கல்தூண்கள் செதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கோயில்களில் தூண்கள் காண்கையில் நாலாபுறமும் கூம்பு போல் பூக்களை காணலாம். ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பிறந்த ஊர் அங்குள்ள பெருமாள் கோயிலில் ஒரு புளிய மரம் உள்ளது. கோயிலில் உள்ள பட்டர் சொல்வார் இதுதான் நம்மாழ்வார் அவதரித்த புளிய மரம் என்று, எனக்கு ஆச்சரியம் 1300 ஆண்ண்டுகளாகவா ஒரு புளிய மரம் இருக்கும். பட்டர் ஆம் என்றார். ஆனால் இது அந்த புளிய மரம் அல்ல வேறொன்று, அதன் தொடர்ச்சி, என்றைக்கும் இங்கு ஒரு புளிய மரம் இருக்கும். இது போனபின் இன்னொன்று இருக்கும். என்றும் அழியாத கனிமரம். ஆனால் அந்த கோயில்? அதுவும் இருக்கும், எவ்வளவு காலம்? ஒரு 4000 அல்லது 10000 வருடங்கள் என கொள்வோமே, ஆக அழியக்கூடிய மாறாத கல்தூணை விட, தன்னை மாற்றி என்றும் இருக்கும் கனிமரமே சிறந்தது.
1900 களில் கர்சன் பிரபுவின் உரை
புகழ்பெற்றது. நிர்வாகவியலில் இந்திய IAS Officer கள் நியமனம் சம்பந்தமான விவகாரத்தின்போது அவர் உரையாற்றினார். அவர் சொன்னார்,இந்தியர்களுக்கு நிர்வாகம் செய்யும் திறன் கிடையாது. அதற்கு கூறிய இரு காரணங்கள்,
1. இந்தியர்கள் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். தேங்கிய மனநிலையுடையவர்கள்(Static). ஆகையால் புதிய ஒன்றை அவர்களால் கற்றுக்கொள்ள இயலாது. மாற்றத்தை விரும்பாதவர்கள்.
2. தன்னை வெளிப்படையாக முன்வைக்காதவர்கள் இரண்டு முகம் உடையவர்கள் பொதுவில் ஒருவராகவும் வீட்டில் ஒருவராகவும் இருப்பவர்கள்.
கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இவை உண்மைதான். அவர் கூறியவற்றை நாம் கடந்த 90 ஆண்டுகளாக நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். அவர்கள் நம்மைவிட மேம்பட்டவர்கள் என கூற முக்கிய காரணம் அவர்களின் Dynamic மனநிலை. Social Media Profile Picture - ஐ எடுத்துக்கொண்டால் தெரியும், 40 வயது அழகான இளைஞர். நேரில் சென்றால் 60 வயது தாத்தா அமர்ந்திருப்பார். நான் அவ்வாறுதான் தி.க.சி-ஐ நேரில் சந்தித்து அதிர்ந்துவிட்டேன். அப்புறம் FaceBook-இல் ஆவேசமாக முற்போக்கு புரட்சி பேசுபவர்கள் வீட்டில் நேர்மாறாக இருப்பதை காணலாம். ஆகவே கர்சன் பிரபு கூற்றை எவ்வாறு மறுக்க முடியும்.
ஏன் இந்த மனநிலை, ஆறுமுக நாவலர், வள்ளலாரின் பன்னிரு திருமுறைகளையும் தொகுக்க அனுமதி கேட்டார். அதற்கு வள்ளலார் மறுத்துவிட்டார். இறுதியாக நாவலர் உண்ணாவிரதம் இருந்து போராடினார். வள்ளலார் ஒப்புக்கொண்டார். பதிப்பு முடிந்து வள்ளலாரிடம் காட்டினார். அதன் தலைப்பை பார்த்து வள்ளலார் அதிர்ந்து ஆங்கிலத்தில் திட்டினார். கடைசியில் அதுவும் வெளியானது, அதுதான் அருட்பா.
வள்ளலாரின் சிந்தனைகளை நாவலர் வகுக்கிறா ர். அதாவது, இதுதான் எல்லை, இதற்குமேல் இன்னொன்று வரப்போவதில்லை என்றவாறு, அங்குதான் அதிகாரம் உருவாகிறது. அதிகாரம் செய்ய அமைப்பு தேவைப்படுகிறது. அதற்குப்பின் அதை எவரும் மாற்ற நினைக்கக்கூடாது. இங்குதான் தேக்கம் உருவாகிறது(Break).
30 ஆண்டுகளுக்கு முன் நான் சிறுகதை எழுதி சி.சு.செல்லப்பாவிடம் சென்றேன், அவர் சொன்னார். ஒரு எழுத்தாளரை
குறிப்பிட்டு அவருக்குப் பின் அவரை விட சிறந்த சிறுகதை எழுதி விட முடியாது. அவரின்
சிறுகதை தன உச்சமாக இருக்க முடியும் என்றார். அதற்குமேல் வேறொன்று இல்லை என்றார். இங்கு
ஒரு Break. ஆக இங்கு எல்லாவற்றுக்கும் Break
போடும் வழக்கம் உள்ளது. ஒன்றை நிறுத்திதான் ஒருவர் தன்னை நிறுவிக் கொள்ள முடியும்.
அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்திற்குதான் அத்தனையும், பின்னர் எப்படி அங்கு
creativity அல்லது சிந்தனை உருவாகும், அதை தடுக்க நாம் யார்?
நமது சிற்பக்கலையில் இருவகைமையை அடையாளப்படுத்தலாம். ஒன்று செவ்வியல் கலை - சோழர் கால சிற்ப கலையை உதாரணமாக சொல்லலாம், சாதாரண ஒரு சிலையை மிக எளிய அலங்காரத்துடன் சிறப்பாக வடிப்பது, மெல்லிய சிரிப்பு அபிநயத்தை உருவாக்குவது. இதனை செவ்வியல் தன்மை எனலாம். இரண்டாவதாக கோராக் சிற்பங்கள் - கட்டற்ற தன்மை கொண்டவை. சிறிய கால்விரல் நகத்தில் மூன்று தலைகள் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்தை கண்ணுள்ளேன். அவற்றை லென்ஸ் கொண்டுதான் பார்க்க முடியும். அவற்றில் அடைவது என்ன. அதனை எத்தனை பேர் கண்டிருப்பார்கள். அதனை வடித்த சிற்பியின் நிலைதான் (ஆன்மிக நிலை) முக்கியம். அதனை காணும் நாம் அவன் அடைந்த நிலைக்கு (Reverse process) செல்ல முயன்றோமாயின் அதுதான் அதன் பயன்.
புதுச்சேரியை சேர்ந்த கட்டிடவியல் நிபுணர் இலைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.உலகிலேயே பெஸ்ட் architype இலைகள்தான் என கூறினார். ஒரு சிறிய Root-இல் அவ்வளவு பெரிய space-ஐ தாங்கி கொண்டிருக்கின்றன என்றார். ஒரு கல்தூணை அவ்வாறு வடிவமைக்க இயலாது. மேலும் கீழும் அகன்று தான் அமைய முடியும்.
பகுதி – 2
ஒரு வைஷ்ணவ பிரம்மச்சாரி ஒருமுறை அமெரிக்கா சென்றார். தாடி , ஜடாமுடியுடன் ஒரு முனிவர் போல தோற்றமுடையவர். ஒருவர் அவரை கண்டவுடன் ஆச்சரியத்துடன் அவர்முன் வந்து நீண்ட நாட்களாக அவரை போன்ற ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாகவும், அவரை தம்முடன் வரும்படி அழைத்தார். அமெரிக்காவில் ஒரு ஆசிரமம் உருவாக்கியிருப்பதாகவும், அங்கு அனைத்துமே பழைய நெறிகளை கடைபிடிப்பதாகவும் அதுதான் தாம் இருக்க வேண்டிய இடமென அழைத்தார். இவரும் மகிச்சியுடன் அங்கு சென்றார். அவர் சொன்னதைப் போலவே மூங்கிலாலான குடில்கள் விறகடுப்பில் சமையல், வேள்விகள் நடத்தும் முனி போன்றோர்கள் என வியாச முனி காலத்தில் இருப்பது போல் தோன்றியது. இங்கு இப்படித்தான் நாங்கள் பழைய நெறிகளை உறுதியாக கடைபிடிப்பதாக கூறினார். அதன்பின் தலைமை குருவிடம் அழைத்து சென்றார். அங்கு ஒரு வெள்ளைக்காரர் தாடியுடன் அமர்ந்திருந்தார். இவரை கண்டவுடன் மகிழ்ந்து நீராடி வரும்படி கூறினார், குழப்பத்துடன் ஏன் என்றபோது இவரை அழைத்து வந்தவர் சொன்னார், நீங்கள் மிகவும் பாக்கியம் உள்ளவர், உலக நன்மைக்காக ஒரு யாகம் நடத்துகிறோம், அது முழுமையடைய ஒரு நைஷ்டிய பிரம்மச்சாரியை பழி கொடுக்க வேண்டும், அதற்காகத்தான் தம்மை அழைத்து வந்திருப்பதாக கூறினார். அவர் அதிர்ந்துவிட்டார்.
இக்கதையை போல பின்னுக்கு செல்வது என்பது சரியல்ல, அப்புறம் நாம் மதங்களிலிருந்து அல்லது பண்பாட்டிலிருந்து எதைப் பெற்றுக்கொள்வது, நாம் பெருமை கொள்ள என்ன இருக்கிறது. மொழியை எடுத்துக்கொண்டால் கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் முதலில் தோன்றியது தமிழ்மொழி என ஆரம்பித்துவிட வேண்டியது. உலகிலுள்ள அனைத்து மொழிகளும் தமிழ்மொழியிலிருந்து பிறந்தது என கூறிக்கொள்வது. நான் கண்டவரை உலகிலுள்ள அனைத்து முட்டாள்தனத்தையும் இணையத்தில் ஏற்றிய ஒரே சமூகம் நம் தமிழ் சமூகம் தான். youtube இல் தமிழ்மொழி வரலாறு என அடித்தால் போதும், உங்களுக்கே புரியும். வேறு மொழியில் ஏதாவது வார்த்தையின் ஓசை தமிழ்மொழியுடன் ஒத்துப்போனால் போதும் உடனே அது தமிழ் மொழியிலிருந்து பிறந்தது என சொல்லிவிடுவது எவ்வளவு பெரிய அபத்தம்.
உதாரணத்திற்கு மலையாளத்தை எடுத்துக்கொள்வோம், அதுதான் ஒப்புநோக்க கடைசியாக தோன்றிய மொழி வடிவம். அப்பெடியெனில் அதற்குமுன் அம்மொழி இல்லையா, அவ்வாறல்ல அது வேறு வடிவத்தில் இருந்தது. மலையாண்மை மொழியை இன்றும் நாட்டுப்புற பாடல்களில், பழங்குடிகள் பயன்படுத்துகின்றனர். மலையாண்மை இப்போது மலையாளம் பேசுபவர்களுக்கு புரியாது.
இரு சிறு குழுக்கள் எடுத்துக்கொள்வோம். ஒன்றிற்கு வெளியிலிருந்து அல்லது வெளி உலக தொடர்பு ஏற்படுகிறது. புதியவற்றைக் கற்றுக்கொள்கிறது, முரண்படுகிறது. தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்கிறது. இன்னொரு குழு எவ்வித தொடர்பும் இல்லாமல் தேங்கி அதே நிலையில் மாறாமல் உள்ளது. நாளடைவில் முந்தய குழு வேறு உலகத்துடன் தொடர்பு கொண்டு நாகரிகமடைந்து, தேவையானவற்றை மாற்றி, வேண்டாதவற்றை விலக்கி புதுப்பித்துக்கொள்கிறது. அம்மாற்றம் மொழியிலும் நடந்து புதிய மொழி உருவாகிறது. அதற்குமுன் அது வேறொன்றாக இருந்திருக்கும்.
இவ்வாறாக இருக்க நாம் நமது பெருமைகளாக உலகத்தின் முன் வைக்க என்ன இருக்கிறது, எதை முன்வைக்க வேண்டும்.
1)
நம் மொழியில் சிலப்பதிகாரத்தை செவ்வியல் இலக்கியமாக முன் வைக்கலாம். அதே சிலப்பதிகாரம் நாட்டுப்புறப் பாடலாகவும் உள்ளது. கண்ணகிதான் நாட்டுப்புற பாடலில் கர்ணகியகவும், கோவலன் கோவிலானாகவும் உள்ளார்கள். மூல சிலப்பதிகாரத்தை அச்சில் எடுத்தால் 100 பக்கங்கள் தான் வரும், ஆனால், நாட்டுப்புற பாடல் 12 நாட்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் பாடிக்கொண்டிருப்பர். ஒருவர்கூட முழு நாட்டுப்புறப்பாடல் சிலப்பதிகாரத்தைக் கேட்டிருக்க இயலாது. ஒரு மொழியில் செவ்விலக்கியம் தோன்றிய பின்னரும் அதே வடிவம் நாட்டுப்புறவியலிலும் தொடர்வது அபூர்வம். ஒரே இலக்கியம் இரு கலைகளிலும் இருப்பது நமது பெருமை.
2)
சங்க இலக்கியம் முதல் இப்போது உள்ள நவீன இலக்கியம் வரை உள்ள அறுபடாத தொடர்ச்சி நமது பெருமை. இவ்வாறு ஒரு மொழியில் நிகழ்வது மிகவும் அரிது.
3)
ஒரு மொழியில் அனைத்து மதங்களை சார்ந்த செவ்வியல் நூல்கள் அமைய பெற்றிருப்பது நமது பெருமை. திருக்குறள் சமணர்களின் கொடை , சீறாப்புராணம், கம்பராமாயணம் இவையெல்லாம் நம் மொழியின் சிறப்பு.
4)
நம் மரபில் மூன்று அறிவியக்க செயல்பாடு குறிப்பிடத்தக்கது. முதலில் 3ம் நூற்றாண்டில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சிற்க்கு மாற்றப்பட்ட நமது சங்க இலக்கியங்கள்.
5) நம்முன் உள்ள சவால் என்பது இலக்கியத்தில் பேசப்படுபவை ஆவணங்களாக அல்லது கல்வெட்டுக்களாக கிடைக்கவில்லை. நமக்கு கிடைத்திருக்கும் ஆதிச்சநல்லூர், கீழடி பற்றி எந்த இலக்கியத்திலும் ஒரு சிறு குறிப்பு கூட பேசப்படவில்லை. நமக்கு கிடைத்திருக்கும் கல்வெட்டுகளை வைத்து 200 ஆண்டுகளுக்கு முன்தான் நாம் நம் தமிழ் மொழி 2400 ஆண்டுகள் தொன்மையானவை என நிறுவினோம். இதுதான் இரண்டாவது அறிவியக்க செயல்பாடு. கீழடியின் முக்கியம் என்பது ஒரு முழுமையான நகரை (2400 ஆண்டுகள் பழமையானவை) கண்டறிந்துள்ளோம். ராஜஸ்தானில் 5000 ஆண்டுகள் பழைய நகரங்கள் நிறைய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சீனம் இதைவிட தொன்மையானது. ஒரு உலக அரங்கில் நமது இந்திய அமைச்சர் உலகிலேயே தொன்மையானது தமிழ் மரபு என சொன்னார். நான் ஏன் அருகிலுள்ள சீன அமைச்சரிடம் நீங்க இக்கூற்றை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் He thinks so. அதைவிட ஒரு அவமானம் வேறு உண்டா.
6)
மூன்றாவது அறிவிக்க செயல்பாடு என்பது 100 ஆண்டுகளுக்கு முன் உருவான நவீன தமிழ் இலக்கியத்தின் கொடை. தோராயமாக ஆ. மாதவன், பாரதியாரின் தொடக்க காலகட்டம். 1880களை சொல்லலாம்.
இவ்வுரையின் ஆரம்பத்தில் என்னிடம் ஒருவர் கேட்டதுபோலவே நான் நித்யாவிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதாவது, கடவுள் உருவ சிலைகளிலே பூரணமான அல்லது பெஸ்ட் என எதைச் சொல்லலாம் என. உடனே அவர் நீயே யோசித்துப்பார், உனக்கு என்ன தோன்றுகிறது என்றார்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலைகளில்
அதனதன் அவதாரத்திற்கு ஏற்றவாறு அமையப்பெற்றிருக்கிறது, இருந்தாலும் பூரணத்துவம் என்பது இறைவனின் மணக்கோலம் என தோன்றுகிறது என்றேன்.
ஒருநாள் ஒரு மருதமரம் முன் நின்றுகொண்டிருந்த போது திடீரென எனக்கு அதன் மடிப்புகளும், திமிறிய கொண்டை போன்ற தண்டுகளும் சிற்பத்தூணை நினைவுபடுத்தின. என்முன் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு நிற்பது போல் தோன்றியது. ஒரு சிற்பியின் நிலையை அடையப்பெற்றேன்.
பின்னொரு நாளில் ஆற்றூர் ரவிவர்மாவுடன் பயணத்தின் பொது, ஒரு பெரிய யானை சிற்பத்தை கண்டேன், இறங்கி அதனருகில் சென்று பார்த்தேன். திடீரென அதன் தும்பிக்கை என்னை தொடுவதாக உணர்ந்தேன். நம்மால் ஒரு சிற்பத்தின் மூலம் அதன் உயிர்ப்பை அடைய முடியுமானால் கல்தூணும் கனிமரமாகலாம்.
Comments
Post a Comment